பண்டைய இலங்கையின் தலை நகராய் விளங்கியதும், வரலாற்று முக்கியத்துவம் பெற்றதுமான பார் போற்றும் உழவர்களைப் பாற்பொங்க வைக்கும் பராக்கிரம சமுத்திரத்தைக் கொண்ட மருத நிலமாகிய பொலன்னறுவை மாவட்டத்தின் நகரத்தில் இருந்து வட கிழக்கே சுமார் 15 கிலோ மீற்றர் துாரத்தில் தம்பாளைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் மேற்றிசை வானிலே மின்னும் தாரகையாய் விளங்குவது றிபாய் புரம். இம்மண்ணிலே தோன்றி அறிவொளி பரப்பி விண்ணை நோக்கி வீறு நடை போடுவது பொ/அல்-றிபாய் மகா வித்தியாலயமாகும். இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் குறுகிய கால வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலை கல்வித்துறையில் வியத்தகு சாதனைகளைப் படைத்து வருகிறது என்றால் மிகையாகாது. இப்பாடசாலையின் தோற்றத்திற்கு முன்பு இப்பகுதி மாணவர்கள் பல மைல்களுக்கு அப்பால் உள்ள பாடசாலைக்கு கால் நடையாகச் சென்றே கல்வி கற்று வந்தனர். மழை காலங்களிலோ பாடசாலைக்குச் செல்லாது வீட்டிலே முடங்கி விடுவர். இது க காலப் போக்கில் மாணவர் மத்தியில் அலுப்புத் தட்டியதோடு நீண்ட துாரம் சென்று வருவதும் பெரும் சிரமாமாக இருந்தது. குறிப்பாகக் கூறினால் 1996ம் ஆண்டு வரை க. பொ. த. (உ.த.) படித்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். மழைக்குக் கூட ஒதுங்க பாடசாலை ஒன்று இல்லாததன் காரணமாக இப்பகுதி மாணவர்களின் கல்வி நிலை முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அழியாச்செல்வமாகிய கல்விச்செல்வத்தின் முக்கியத்துவம் உணர்ந்த இப்பகுதிப் பெற்றோர்கள் செயலில் இறங்கினார்கள். குறிப்பாக மர்ஹூம்களான டி. எம். அபுபக்கர், எம். ஏ. முகமட் லெப்பை, எம். பீ. தாவூது லெப்பை, எம். ஐ. உதுமான் கண்டு, கே. எம். மீராசாகிப், எம். அப்துல் ஜப்பார் அகியோர்களுடன் அல்ஹாஜ். ஏ.எம் முஸ்தபா, சீ. பீ.ஜெமால்தீன், ஏ. எம். அபுபக்கர், ஏ. எஸ். முகம்மது, ஏ. சுல்தான் ஆகியோர்கள் ஊர் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அன்று பொலன்னறுவை மாவட்ட அமைச்சராகவும், மெதிரிகிரியத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு. ஏ. டி. பீ. ஏக்கநாயக்கா அவர்களிடம் பாடசாலையொன்றின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து பாடசாலையொன்றின் உருவாக்கத்திற்கு அனுமதியையும் பெற்றுக் கொடுத்தார். முதலில் தற்காலிகமாக ஓலைக்கொட்டில் ஒன்று அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கான கம்பு தடிகளைப் பக்கத்துக் காட்டில் இருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் கிராம மக்கள் கொண்டு வந்து சேர்த்தனர்.
இதற்கான வாகன வசதிகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ். எஸ். ஏ. ஏ. மஜீட் அவர்கள் முன்வந்து வழங்கினார். மேற்படி பாடசாலையின் தற்காலிகக்கட்டடம் ஊர் மக்களின் உதவியுடன் சிரமதானம் மூலம் அமைக்கப்பட்டு 1979ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் திகதி சர்வதேச சிறுவர் ஆண்டை முன்னிட்டுபொ/அல்-றிபாய் வித்தியாலயம் என்ற பெயரில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.டி.பீ.ஏக்கநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்ட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக உடனடியாக கல்விநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போய் விட்டது. காரணம் ஆசிரியர்கள் இன்மையாகும். சுமார் மூன்று மாத இடைவெளியின் பின் 1979, ஒக்டோபர் 01ம் திகதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1979 ஒக்டோபர் முதலாம் திகதியன்று மேற்படி தற்காலிகக் கட்டிடத்தில் 82 மாணவர்களுடனும் 2 ஆசிரியர்களுடனும் இப்பாடசாலை ஆரம்பமானது. இதன் முதலாவது அதிபர் என்ற பெருமையை ஓய்வு பெற்ற ஜனாப் ஐ. ஏ. வாஹிட் தொலைக்கல்வி போதனாசிரியர் அவர்கள் பெற்றுள்ளார். சுமார் மூன்றரை வருட கால அயராத உழைப்பின் பயனாக இக்கிராமத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கும் இப்பாடசாலையின் இன்றைய உயர்ச்சிக்குமான உறுதியான அத்திவாரத்தைக் கட்டியெழுப்பினார். அதிபருக்கு உதவியாக சற்றும் சளைக்காமல் பக்க பலமாக நின்று அரிய சேவையாற்றினார் ஜனாப். எம். எம். எம். ஜெமீன் ஆசிரியர் (கல்லலை அல் அஸ்ஹர் மு.வி. அதிபர்). இச்சந்தர்ப்பத்தில் மேற்படி இரு ஆசிரியர்களைப் பற்றியும் சிறிது நினைவு கூறுவது சாலச்சிறந்ததாகும். சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள திவுளானைக் கிராமத்தில் இருந்து கால்நடையாகவே வந்து கல்வி புகட்டினர். வரும் வழியில் பல நீரோடைகளையும், ஆறுகளையும் கடந்து வருகையில் மழை காலங்களில் வெள்ள நீரில் எதிர் நீச்சல் போட்ட சம்பவங்களும் அவர்களுக்கும் எமக்கும் என்றுமே மறக்க முடியாதவை. அதிபர் ஜனாப் ஐ.ஏ. வாஹிட் அவர்களின் இடமாற்றத்தினைத் தொடர்ந்து அல்ஹாஜ். கே. எம். இப்றாலெப்பை அதிபராக நியமனம் பெற்றார். இவர் ஒரு திறமைசாலி மாத்திரமன்றி செயல் வீரருமாவார். தான் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு வெற்றி காண்பதில் வல்லவர்.
இப்பாடசாலையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமெனக் கனவு கண்டார். தனது முழு நேரத்தையும் பாடசாலையிலேயே கழித்தார். ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து பாடசாலையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார். அதிபர் அல்ஹாஜ். கே. எம். இப்றாலெப்பைக்கு உதவியாக தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார் தற்போதைய அதிபர் ஜனாப் எம். எப். எம். முபாரக். பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்களைச் சேர்ப்பதில் அதிபரும், மாணவர்களது கல்வி முன்னேற்ற வழிகளில் பிரதி அதிபரும் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்ததன் பயனாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கல்விக்கூடம் வளர்ச்சியடையத் தொடங்கியது. 1982ம் ஆண்டு முதலாவது நிரந்தரக் கட்டடமொன்று (70x20) அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.டி.பி. ஏக்கநாயக்கா அவர்களின் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இன்று பல நிரந்தரக் கட்டடங்களையும், ஆசிரியர் விடுதி, மின்சாரம், தொலைபேசி போன்ற வசதிகளுடன் விசாலமான விளையாட்டு மைதானமும் உடையதாக அமையப்பெற்றுள்ளது.
கட்டிடங்கள் பெற்றுக்கொண்டமை பற்றிக் கூறும் போது முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜனாப். எம். எம். சஹீட் ஆசிரியர், அல்ஹாஜ் எஸ். எச்.எம். அன்சார் (ஜே. பி) டு ஆகியோர் இப்பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்களை வழங்கியதோடு மட்டுமல்லாது பல்வேறு வழிகளிலும் இப்பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது. அத்துடன் 1998ம் ஆண்டு புனர்வாழ்வு அமைச்சால் 100x20 அடி அளவு கொண்ட கட்டிடம் ஒன்று கிடைத்தது. இந்த வகையில் மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் எம். எச். எம். அஷ்ரப் அவர்களுக்கும் இதற்காகப் பாடுபட்ட பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர்களுக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். இவ்வாறு அன்று 82 மாணவர்களுடனும் 02 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று சுமார் 675 மாணவர்களையும் 30 ஆசிரியர்களையும் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது.
இப்பாடசாலையில் மிக நீண்ட காலம் அதிபராக இருந்த அல்ஹாஜ். கே. எம். இப்றாலெப்பை அவர்கள் 1993ம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அவரின் இடமாற்றம் பாரிய இழப்பாக இருந்தாலும் பாடசாலையின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத முறையில் முன்னெடுத்துச் செல்ல அப்போது உதவி அதிபராக இருந்த ஜனாப் எம். எப்.எம். முபாரக் அவர்கள் அதிபராக பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். நிர்வாகத்திறமையும், அனுபவமும் வாய்ந்த அவரால் பாடசாலையைத் தொடர்ந்தும் வெற்றிப் பாதையில் இட்டுச்செல்ல முடிந்தது. இரண்டு வருட காலமாக தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கும் வேளை 1995ம் ஆண்டு அல்ஹாஜ். கே. எம். இப்றாலெப்பை மீண்டும் அதிபராக இப்பாடசாலையில் கடமையேற்றுக் கொண்டார். தொடர்ந்தும் பாடசாலையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அல்ஹாஜ். கே. எம். இப்றாலெப்பை அவர்கள் 1996ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ம் திகதியுடன் தனது அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். ஆனால் அவரது விழிகள் பாடசாலையை விட்டு அகலவில்லை அதிபர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ஜனாப் எம். எப். எம். முபாரக் அதிபராகக் கடமையேற்று இன்று வரையும் தனது பணியை செவ்வனே நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு தற்போதைய அதிபர் பற்றியும் சில வரிகள் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். பொறுமைக்கு இல்லிடம் போன்றவரான இவர் சினேகமான உறவின் மூலம் ஆசிரியர் குழாத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு செயற்படுவதில் வல்லவர்.தனது சொந்த முன்னேற்றத்தையோ குடும்ப நலனையோ பெரிது படுத்தாது பாடசாலை யின் உயர்ச்சியையே தனது இலட்சியமாகக் கொண்டு மழை வெயில் பாராது இரவு பகலாக அரும் சேவை செய்தார். அதிபருக்கு உதவியாக ஜனாப் எம்.ஏ.சீ. எம். நஸீர் அவர்கள் தனது கடமைகளை செய்தார். இவர் இப்பிரதேசத்தை சேர்ந்தவர் அல்லாவிடினும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது